பிரதமர் வேட்பாளருக்கான தகுதி எனக்கு இல்லை!! நிதிஷ்குமார் பளீச் பேட்டி

--

பாட்னா:

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜ.வுக்கு எதிரான அணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதாக வெளியான தகவலை நிதிஷ்குமார் மறுத்துள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘3 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பிரதமராக மோடி வரவேண்டும் என்று கூறினார்கள்.

அதுவும் நடந்தது. அந்த பதவிக்கான தகுதி அவரிடம் இருந்ததால் அது நடந்தது. இதனால் நாட்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். எனக்கு தெரியும். அந்த தகுதி எனக்கு கிடையாது. நான் ஒரு சிறிய கட்சியின் தலைவராக உள்ளேன். எனக்கு தேசிய அரசியலில் நாட்டம் கிடையாது.

எங்களது கட்சியின் தலைவராக சரத்யாதவ் மூன்று முறை இருந்துள்ளார். அதன் பிறகு அந்த பொறுப்பை என்னிடம் வழங்க கட்சி முடிவு செய்தது. ஆனால், எனக்கு தேசிய அரசியலில் நாட்டம் இருப்பதாக மீடியாக்கள் திணிக்கின்றன. கட்சி தலைவர் என்ற முறையில், ஐக்கிய ஜனதா தளத்தை இதர மாநிலங்களில் விரிவுபடுத்துவதே எனது முயற்சியாக இருக்கும். அதனால் பிரதமர் கனவு எனக்கு கிடையாது’’ என்றார்.

இதன் மூலம் ஐக்கிய ஜனதா தளத்தை சிறிய கட்சி என்று நிதிஷ்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். பீகார் ம க்களுக்கு சேவை செய்வதே தனது முடிவு என்பதை அவர் உறுதிபடுத்தியுள்ளார். கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான ஊழல் குற்றசாட் டுக்களில் இருந்து நிதிஷ்குமார் விலகியிருக்கிறார்.

‘‘லாலு மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம்’’ என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

‘‘ஏற்கனவே தேர்தல்கள் எப்படி நடந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அது திரும்ப நான் விரும்பவில்லை. நாங்கள் கூட்டணி ஆட்சியை நடத்துகிறோம். அதனால் ஆர்ஜேடி.யின் கொள்கைகள் எங்ளோடு ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்றார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது லாலு தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் குறித்த கேள்விக்கு நிதிஷ் இத்தகைய பதிலை தெரிவித்தார்.

‘‘ எனது அமைதியோடு மீடியாக்கள் விளையாட வேண்டும். எனக்கு வழக்கமான பணிகள் நிறைய இரு க்கிறது. ஜனாதிபதி தேர்தலை பொருத்தவரை ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு முதலில் அளிக்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால் தான் எதிர்கட்சிகள் வேட்பாளரை நிறுத்த வேண்டும்’’ என்று நிதிஷ்குமார் கராராக தெரிவித்தார்.