பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆதரவுடன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமாருக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வருகிறது.

அந்த மாநிலத்தில் கடந்த சில தினங்களாக குற்றங்கள் பெருகி வருவதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கர்பூரி தாக்கூர் பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதீஷ்குமார் “கர்பூரி தாக்கூர் முதல்-அமைச்சராக இருந்த போது, சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் பாடுபட்டார். ஆனால் அவரது ஆட்சி இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்க வில்லை” என குறிப்பிட்டார்.

“நானும் அனைத்து பிரிவினர் நலனுக்காக பாடுகிறேன். ஆனால் சிலர், நான் இவ்வாறு செயல்படுவதை விரும்பவில்லை” என கூறினார்.

“நான், அனைத்து பிரிவினருக்கு உழைப்பதால் ஒரு சாரார் அச்சமடைந்துள்ளனர்” என்று விழா மேடையில் குறிப்பிட்ட நிதீஷ்குமார், “தானும் விரைவில் பதவி இழக்க நேரிடலாம்” என சூசகமாக கூட்டத்தினருக்கு தெரிவித்தார்.

– பா. பாரதி