பாட்னா:

பீகாரில் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், ‘‘நிதிஷ் குமாரை எனக்கு முதலில் இருந்தே தெரியும். அவரைவிட நான் மூத்தவன். நிதிஷ் குமார் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி. அவருடைய உண்மையான நிறம் வெளியே விரைவில் தெரியும். சந்தேகத்திற்குரிய குணாதிசயத்தால் அறியப்பட்டவர் நிதிஷ் குமார்.

நிதிஷ்குமார் மறந்துவிட்டார். என்னிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அரசியல் கூட்டத்திற்கு சென்றதையும், விவாதத்திற்கு சென்றதையும் நிதிஷ்குமார் மறந்துவிட்டார். முலாயம் சிங் யாதவால்தான் மகா கூட்டணி முதல்வராக நிதிஷ் குமாரை அனுமதித்தேன்’’ என்றார்.

‘‘நேற்று வரை பிரதமர் மோடியை விமர்சனம் செய்துவந்தார். இப்போது திடீரென பிரதமர் மோடியின் பாராட்டு பாட்டை தொடங்கிவிட்டார். அவரை நாட்டின் மிகப்பெரிய தலைவர் என்கிறார்.

இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். நிதிஷ்குமார் புகழ்பெற என்னுடைய மகனை பலிகடா ஆக்க விரும்பியது எனக்கு தெரியும்’’ என்று லாலு தெரிவித்துள்ளார்.