புவனேஷ்வர்:

பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவுக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அறிவித்து உள்ளார். இதன் காரணமாக பாஜக அதிர்ச்சி அடைந்து உள்ளது.

ஏற்கனவே, நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  அறிவித்தால், நாட்டில் உள்ள  75% முஸ்லிம்கள் வாக்கு  கிடைக்கும் என்றும் நிதிஷ் குமாரின்  ஐக்கியஜனதாதளம்  பாஜகவுக்கு யோசனை தெரிவித்திருந்தது.

நிதிஷ்குமார் கட்சியின் இந்த யோசனை பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும்,  5 மாநில தேர்தல் முடிவால் அரண்டுபோய் கிடக்கும் பாஜக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஆசையில், பீகாரில் குறைந்த தொகுதிகளை வாங்கிக்கொண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இந்த நிலையில் முத்தலாக் மசோதாவை நாங்கள் எதிர்ப்போம் என்று  ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்து உள்ளது.

முத்தலாக் மசோதா பாராளுமன்ற லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி யினர் அதிகம் உள்ள ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது. முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்த பிறகே நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். முத்தலாக் மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று பாஜகவுக்கு அதிர்ச்சி  கொடுத்துள்ளது.

இதுக்குறித்து ஜே.டி.யு கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான வசிஷ்ட் நாரா யண் சிங் கூறும்போது,  முத்தலாக் தடை மசோதா மிக அவசரமாக நிறைவேற்றப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்த பின்னரே அதற்கு ஆதரவு தருவது குறித்து யோசிக்கப்படும் என்றார். இந்த விஷயத்தில் பாஜக அவசரம் காட்டினால், எங்கள் கட்சி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.