பாட்னா :

பீகார் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நல்ல நிலையில் இருந்த பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த பின் மோசமான நிலைக்கு ஆளாகி விட்டார்” என தெரிவித்துள்ளார்.

“நிதீஷ்குமார் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரை இயக்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ வேறு நபரிடம் அல்லவா உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

“பாரதிய ஜனதா கட்சி சதி செய்து நிதீஷ்குமாரை பலவீனமாக்கி விட்டது” என புகார் கூறிய தாரிக் அன்வர், “இனிமேல் பா.ஜக. ‘நில்’ என்றால் நிற்க வேண்டும். ‘நட’ என்றால் நடக்க வேண்டும் என்ற சூழலுக்கு நிதீஷ்குமார், பலவீனமாகி விட்டார்” என குறிப்பிட்டார்.

இதனிடையே ஆர்.ஜே.டி. செய்தி தொடர்பாளர் மனோஜ் ஜா அளித்துள்ள பேட்டியில், “பீகார் மக்கள் நிதீஷ்குமாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

“43 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றவரை முதல்வராக எப்படி தேர்வு செய்யலாம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

– பா. பாரதி