பாட்னா

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் உத்தரகாண்ட் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில் கள்ளச்சாராயம் அருந்தி ஏராளமானோர் மரணம் அடைந்தனர். குறிப்பாக சரண்பூர் பகுதியில் மட்டும் இந்த கள்ளச்சாராய மரண எண்ணிக்கை 100 ஐ நெருங்கி உள்ளது. இவ்வாறு மரணம் அடைந்தவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தகனம் செய்தனர். இந்த செய்தி நாட்டையே உலுக்கி உள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமுல் படுத்தினார். அவர் இந்த கள்ளச்சாராய மரணம் குறித்து பேசுகையில், “நான் நாடெங்கும் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு முழு மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதன் மூலம் மது உற்பத்தியும் விற்பனையும் முழுவதுமாக நிறுத்தப்படும் நிலை உண்டாகும்.

கள்ள சாராயம் பருகி இன்றைய நிலையில் நூற்றுக் கணக்கானோர் உத்திரப் பிரதேசத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் மரணம் அடைந்துள்ளனர். ஆகவே நான் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரிடம் மதுவிலக்கை இம்மாநிலங்களில் அமுல்படுத்த வேண்டிக் கொள்கிறேன்.

கடந்த 2016 ஆம் வருடம் நான் அப்போதைய உத்திரப் பிரதேச முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு இதே கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் அதை நிறைவேற்றவில்லை. அதே கோரிக்கையை நான் யோகி ஆதித்யநாத்துக்கும் விடுத்தேன். அவரும் அதை கண்டு கொள்ளவில்லை. பல மாநிலங்களில் மதுவுக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமுல் படுத்திய போது பிரதமர் மோடி என்னை மிகவும் பாராட்டினார். இது ஒரு தைரியமான முடிவு என அவர் தெரிவித்தார். மோடியும் மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவாக உள்ளார். எனவே மோடி உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரிடம் மதுவிலக்கை அமுல்படுத்த சொல்ல வேண்டும்.

யோகாவை நாடெங்கும் பரப்பி வரும் மோடி யோகாவுக்கு எதிரான மதுவை ஒழிக்கவும் உத்தரவிட வேண்டும். யோகா ஒரு இயற்கை சிகிச்சை முறை. மது அருந்துவோருக்கு அது பலன் அளிக்காது. எனவே இதை மனதில் கொண்டு நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர மோடி முயற்சி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.