பாட்னா,

பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பாரதியஜனதா ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வர் பதவியை பிடித்துளாளர்.

அவருக்கு கவர்னர் கேசரிநாத் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பதவியை விட்டு விலகுவதாக ராஜினாமா செய்த நிதிஷ் அடுத்த 16 மணி நேரத்திற்குள் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த செயலுக்கு பின்புலமாக பாரதியஜனதா இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

பீகாரில் துணைமுதல்வராக உள்ள லல்லுவின் மகன் தேஜஸ்வி மீது சிபிஐ குற்றச்சாட்டு கூறியிருந்தது. இதன் காரணமாக அவரை பதவி விலக முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தினார்.

இதன் காரணமாக இரண்டு கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை திடீரென கவர்னரை சந்தித்து நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் பாரதியஜனதாவுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, தனக்கு பாரதியஜனதா ஆதரவு இருப்பதாக கூறியதை தொடர்ந்து, அவரை மீண்டும் முதல்வராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இன்று மாலை அவர் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென இன்று காலையே அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் பாரதியஜனதா மூத்த தலைவர் சுசில்குமார் மோடியும் பதவி ஏற்றுள்ளார்.

இன்னும் 3 ஆண்டுகள் நிதிஷ்குமாரின் ஆட்சி உள்ள நிலையில், லல்லுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக தனத முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதாவுக்கு எதிராக, லல்லு மற்றும் காங்கிரசுடன் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார்,

மீண்டும் பாரதிய ஜனதாவிடமே அடைக்கலமாகி, தற்போது மீண்டும் முதல்வராகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பீகார் கவர்னராக இருந்தவர்தான்  தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். அப்போது பாரதியஜனதா தலைவர்களுடன் நிதிஷ்குமார் அளவளாவியது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் எதிரொலி தற்போது பிரதிபலித்துள்ளதாக கூறப்படுகிறது.