பாட்னா :

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு மூன்று நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டது.

இந்த அமைச்சரவையில் மேவாலால் சவுதாரி என்பவருக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பகல்பூர் வேளாண்மை பல்கலைகழகத்தில் துணை வேந்தராக இருந்தார்.

அப்போது உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பல்கலைகழகத்துக்கு கட்டிடம் கட்டியதில் ஊழல் நடந்ததாகவும் சவுதாரி மீது புகார் கூறப்பட்டது.

இதனால் சவுதாரி மீது வழக்கு தொடர அப்போது ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அனுமதி வழங்கினார். இதனால் சவுதாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊழல் வழக்கில் தொடர்பு உடைய சவுதாரியை அமைச்சர் ஆக்குவதா? என அங்குள்ள எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதை சவுதாரி, வேட்பு மனு தாக்கல் செய்தபோது, இணைக்கப்பட்ட அபிடவிட்டில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

பதவி ஏற்ற இரண்டே நாளில், தனது சகா மீது கூறப்பட்டுள்ள புகார் காரணமாக நிதீஷ்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

– பா. பாரதி