மக்களவை தேர்தல் : அதிக இடம் கேட்கும் நிதிஷ் : அதிர்ச்சியில் அமித்ஷா

டில்லி

டுத்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதிக இடங்கள் கேட்டுள்ளார்.

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான இட பேரங்களுக்கான பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது.  பாஜக தற்போது பீகார் மாநில கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.   கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக 21 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இரு இடங்களிலும் வென்றது.   ஐக்கிய ஜனதா தளம் அப்போது 38 இடங்களில் போட்டி இட்டது.

வர உள்ள தேர்தலில் பாஜக தனக்கு 20 இடங்களை வைத்துக் கொண்டு ஐக்கிய ஜனதா தளத்துக்கு 12 இடங்களும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 இடங்களும் ஆர் எல் எஸ் பி கட்சிக்கு 2 இடங்களும் அளிக்க திட்டமிட்டுள்ளது.   ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தங்கள் கட்சிக்கு கவுரவமான முறையில் 12 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நேற்று இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார்.   அப்போது கிஷோர் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்றது அமித்ஷாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   இதை ஒட்டி நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பரான நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை அமித்ஷா சந்தித்துள்ளார்.

அருண் ஜெட்லி இந்த விவகாரத்தில் நிதிஷ் குமாருடன் பேசுவார் என கூறப்படுகிறது.   இந்த விவகாரம் முடிந்த பின் அமித்ஷா லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் ஆர் எல் எஸ் பி தலைவர் உபேந்திர குஷாவா ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில் பாஜக வுக்கு மற்றொரு அதிர்ச்சி வந்துள்ளது.   ஆர் எல் எஸ் பி கட்சியினர் தங்களுக்கு குறைந்த இடம் கிடைத்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகலாம் என தகவல்கள் வந்துள்ளன.   அத்துடன் ஐக்கிய ஜனதா தளமும் விலகி அவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.