லோக்சக்தி கட்சி ஆட்சி அமைத்தால் நிதிஷ் குமார் சிறை செல்வார்: சிராக் பாஸ்வான்

பாட்னா: பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் சிறை செல்வார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 28 மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.

முதற்கட்டத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. அதன் ஒரு பகுதியாக, பீகாரில் டும்ரான் மாவட்டத்திலுள்ள பக்ஸார் பகுதியில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கூட்டத்தினர் மத்தியில் அவர் பேசியதாவது:  பீகாரில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க லோக் ஜனசக்தி பாடுபடும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சிறை செல்வார்கள். அதிகாரிகள், மாநில முதல்வர் என யாராக இருந்தாலும் சரி சிறை செல்வார்கள்.

பீகார் மாநிலத்துக்கு முன்னுரிமை, பீகார் மக்களுக்கே முதலுரிமை என்ற கொள்கை படி நலத்திட்டங்களைச் செயல்படுத்த லோக் ஜனசக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.