பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக்வுக்கு துரோகம் இழைப்பார் என பாஜக முன்னாள் கூட்டணி கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகா எச்சரித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் வருடம் பாஜக தனது பிரசார குழு தலைவராக அப்போது குஜராத் முதல்வரக இருந்த மோடியை அறிவித்தது.   இதனால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டார்.

அதன் பிறகு நிதிஷ் குமார் பாஜகவுக்கு எதிராக 2017 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வென்று கூட்டணி ஆட்சி அமைத்தார்.   திடீரென அந்த கூட்டணியை கலைத்து விட்டு மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து அமைச்சரவை அமைத்தார்.    தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் போட்டி இட்டார்.

சென்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகா, ”நிதிஷ் குமார் எப்போதுமே மக்களின் தீர்ப்புக்கு எதிராக நடப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருப்பவர் ஆவார்.   அவரைப் போல் மற்றவர்களை ஏமாற்றியவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

அதைப் போலவே அவர் ஏற்கனவே பாஜகவுக்கு துரோகம் இழைத்தார்.  அதன் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு துரோகம் இழைத்தார்.  தற்போது  தனது கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்னும் மன நிலையில் உள்ளார்.   அதனால் அவர் மீண்டும் பாஜகவுக்கு துரோகம் இழைப்பார்” என தெரிவித்துள்ளார்.