பாட்னா :

பீகார் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. புர்னியா மாவட்டத்தில் உள்ள தாம்தகா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்-அமைச்சருமான நிதீஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். பிரச்சாரம் முடிவடையும் நேரத்தில் நடந்த கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும்.

அப்போது அவர் “இதுவே எனது கடைசி தேர்தல்” என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

“நிதீஷ்குமார் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார், அதனால் தான், இது எனது கடைசி தேர்தல் என பேசியுள்ளார்” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நிதீஷ்குமார் பேச்சுக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி புதிய விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில தலைவரான வசீஸ்த நாராயண சிங் கூறும்போது “சமூக சேவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். அதனை குறிக்கும் வகையில் தான் “இது எனது கடைசி பொதுக்கூட்டம்” என நிதீஷ்குமார் தெரிவித்தார்.

ஆனால் “இது எனது கடைசி தேர்தல் என நிதீஷ்குமார் கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

“நிதீஷ்குமார் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடம் இல்லை” என்றும் நாராயண சிங் கூறினார்.

– பா. பாரதி