சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார் நிதிஷ்! ராகுல் கடும் தாக்கு!

--

டில்லி,

ங்களது கூட்டணிக்கு வாக்களித்த மக்களை முதல்வர் நிதிஷ்குமார் ஏமாற்றி விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல் சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார் நிதிஷ் என்றும் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 

லாலு பிரசாத் மகன் தேஜஸ்வியுடன் ஏற்பட்ட ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நிதிஷ்குமார் நேற்று திடீரென கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அடுத்த 16 மணி நேரத்திற்குள், பாரதியஜனதா ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த நாடகம்,  நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, பாரதியஜனதாவுக்கு எதிராக  லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றிபெற்ற நிதிஷ்குமார், திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி,  பா.ஜனதாவுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றிருப்பதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ராகுல் கூறியதாவது,

நிதிஷ்குமார் பாரதியஜனதாவுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாக  எங்களை ஏமாற்றி விட்டார். எங்கள் கூட்டணிக்கு  வாக்களித்த மக்களுக்கு எதிரான முடிவை எடுத்து விட்டார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, பொதுமக்கள்  மதவாதத்துக்கு எதிராகத்தான் வாக்களித்தார்கள். அப்போது மதவாத சக்திகளுடன் சேரமாட்டேன் என்று பீகார் மக்களிடம் உறுதி அளித்தார். ஆனால், தற்போது வாக்குறுதியை மீறி மதவாதிகளுடன் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளார்.

மதவாதத்துக்கு எதிராக போராடவே அவர் எங்களுடன் இணைந்தார். ஆனால் நிதிஷ்குமார் தற்போது தனது அரசியல் சுயநலத்துக்காக மதவாத சக்திகளுடன் கைகோர்த்து விட்டார். இந்திய அரசியலில் இருக்கும் பெரிய பிரச்சினை இதுதான்.

நிதிஷ்குமார் எங்கள் கூட்டணியில் இருந்து திட்டமிட்டுதான் வெளியேறினார். அவர் எங்களை விட்டு சென்றுவிடுவார் என்பது 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பே தெரியும். சுயநலவாத அரசியலுக்கு எதிராக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ஆட்சியை கைப்பற்ற எதுவும் நடக்கலாம். கொள்கை இல்லை. நம்பகத் தன்மை இல்லை. திட்டமிட்டு தனது சதி செயலை நிதிஷ்குமார் அரங்கேற்றி இருக்கிறார்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.