பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். பல ஆண்டுகளாக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் 2015 நவம்பரில் நடந்த பீகார் சட்டமன்றத்தேர்தலில் மகா கூட்டணி அமைத்து 178 இடங்களில் வெற்றிபெற்று மோடி அலையை வீழ்த்திக் காட்டினர். மகா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் 80 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளையும், காங்கிரஸ் 27 தொகுதிகளையும் கைப்பற்றியது.

முதல்வர் நிதிஷ்குமாரின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.56.49 லட்சம். பீகார் முதல்வரின் ஒரே மகன் நிஷாந்த் குமார் . பொதுவாக ஊடக வெளிச்சத்திலிருந்து தன்னை தள்ளியே வைத்திருப்பவர். நிஷாந்த்துக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.2.36 கோடியாகும். குடும்ப பாரம்பரிய விவசாய நிலம், காலி மனை ஆகியவற்றை சேர்த்து அசையாகச் சொத்து ரூ.1.24 கோடிக்கு உள்ளது. அதாவது, நிதிஷ்குமாரின் மகனுக்கு, அவரைவிட நான்கு மடங்கு அதிகமாகச் சொத்து உள்ளது. நிஷாந்த் தன் தந்தையுடன் “முதல்வர் குடியிருப்பில் வசித்து வருகின்றார்.

பாட்னாவில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை வரவேற்ற லாலு பிரசாத், இளைஞர்களிடம் கட்சிப் பொறுப்புகளைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் (லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி அம்மாநிலத்தில் துணை முதலமைச்சராகவும், மற்றொரு மகன் தேஜ் பிரதாப் சுகாதார அமைச்சராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது). தமக்கும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் வயதாகிவிட்டதால் அரசியலில் பின்வாங்குவதுதான் நல்லது என்று ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

சிலநாட்களுக்கு முன்னர் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியும், “மக்கள் விரும்பினால், தேஜஸ்வி முதல்வராக விரைவில் வருவார். ஜனநாயக நாட்டில், மக்கள் தான் எஜமானர்கள் “என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
இதற்கு லாலு, “தன் மகன் இன்னும் அனுபவம் பெறவில்லை. ஆனால், தேஜஸ்விக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது” என்று சர்ச்சைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், நேற்று, நிஷாந்த், மறைந்த தன் தாயார் மஞ்சு சின்ஹாவின் பிறந்த நாளையொட்டி மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

நிஷாந்த் ஒரு உள்ளூர் செய்திச் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்,”எனக்கு அரசியல் ஆர்வம் துளியும் கிடையாது. மேலும், அரசியல் குறித்த அனுபவமோ, அறிவோ எனக்கில்லை. என் முதல் காதல் ஆன்மீகத்தின் மீது தான். தற்போதைய சூழ்நிலையில், நான் ஆன்மீகத்தை விரும்பிப் பின்பற்றி வருகின்றேன். நான் ஒரு ஆன்மீக வாழ்க்கை வாழவே முடிவு செய்துள்ளேன்.” எனக் கூறினார்.

மேலும், நிஷாந்த் தான் ஏற்கனவே தனது ஆன்மீக வாழ்க்கை பற்றிய தகவலைத் தன் தந்தையிடம் தெரிவித்துவிட்ட்தாக்க் கூறினார். “எனது தந்தைக்கு வாரிசு அரசியல் பிடிக்காது என்பதால், என்னை அரசியலில் சேர வற்புறுத்தமாட்டார் “என்றார்.

லாலு பிரசாத்தின் வாரிசுகள் அரசியலில் களமாடி துணை முதல்வர் பதவிவரை அனுபவிக்க, முதல்வர் நிதிஷின் ஓரெ மகனின் கவனம் அரசியல் மீது இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று.

நிஷாந்த், அவரது தந்தை நிதிஷ் குமார் பிரதமராக ஆகத் தகுதியானவரா என்ற கேள்விக்கு, “எனது தந்தை பிரதமர் ஆவதற்கு அனைத்து தகுதியும் உடையவர். பீகாரின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுவருபவர். இந்திய நாட்டு மக்கள் அவர்மீது நம்பிக்கை வைத்தால், நிச்சயம் ஒருநாள் பிரதமராகி தேசத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடுவார். லாலுவின் மகன்களுக்கு அரசியலில் ஆர்வம் இருந்து எனவே அவர்கள் அரசியலில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். எனக்கு ஆன்மீகத்தில் தான் நாட்டம் அதிகம் எனவே நான் அரசியலில் ஈடுபடமாட்டேன்” என்றார் உறுதியாக.