டெல்லி: தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந்த புயல் வட தமிழக கடலோர பகுதியில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் மேலும் கூறியிருப்பதாவது: நிவர் புயல் தற்போது வட தமிழகக் கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வடக்கு- வடமேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு மேற்கு – தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேரத்தில் மாறக்கூடும். அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் எதிரொலியாக, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்து உள்ளது.