நிவர் புயல்: சென்னை, புதுச்சேரி உள்பட 9 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக, பாதிக்கப்படும் மாவட்டங்களில்  இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட பல மாவட்டஙகளில்  நேற்றுமுதல் பலத்த மழை பெய்து வருகிறது.  மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் இன்றும் நாளையும் (நவ. 24, 25) நடைபெற இருந்தது. தற்போது, அந்த தேர்வுகள் புயல் அச்சுறுத்தல் கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மட்டும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக இந்த பகுதிகளில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்திகள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.