நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: நிவர் புயல் நாளை  கரையை கடக்க உள்ள நிலையில்,  புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில்  நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 25ஆம் தேதி) மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் காரணமாக,  கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும்,  நாளை மாலை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

இந்தநிலையில்,  இன்று இரவு முதல் 26-ம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரியில் முழ ஊரடங்கு நடைமுறைக்கு வரும் என அம்மாநில மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க்  அறிவித்து உள்ளார். புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன் கருதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மக்கள் தேவையான பொருட்கள், மெழுகுவர்த்தி, உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.