நிவர் புயல்: சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை, 44 மரங்கள் சாய்ந்துள்ளன! மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், 44 மரங்கள் சாய்ந்துள்ளன, அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

நிவர் புயல் 2 நாட்களாக சென்னை உள்பட கடலோர மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறி  புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே ( நவம்பர் 25) நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல்,  இன்று அதிகாலை (நவம்பர் 26ந்தேதி) 2.30 மணிக்கு முழுவதும் கரையைக் கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால், சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின் விநியோகமும் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்,  நிவர் புயல் காரணமாக, சென்னை மாநகரில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.  அவற்றில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுகள், தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.  சென்னையில் மட்டும் 44 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. அந்த  மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.  நிவர் புயலால் சென்னையில் எந்தவித பெரிய சேதமும் ஏற்படவில்லை. நிவர்  புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது என்றதுடன், இந்த மழை நேரத்தில்,  பொதுமக்கள் தனி மனித இடைவெளியை முறையாக பின்பற்றினால் கொரோனவை வெல்ல முடியும். தற்போது, சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.