நிவர் புயல் – கனமழை எதிரொலி: 25, 26, 27- ம் தேதிகளில் நடைபெறவிருந்த எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: நிவர் புயல்  மற்றும்  கனமழை எதிரொலியாக, 25, 26, 27- ம் தேதிகளில் நடைபெறவிருந்த எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகள் மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புயல் மழை காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒத்திவைக்கப்படும் தேர்வுகள்   டிசம்பர் 15,17,19-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது நாளை மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. புயல் கரை கடக்கும் இடத்தில் 110-120 கிமீ வரை காற்று வீச கூடும் என்றும், இன்றும், நாளையும் கன மழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  நாளை தொடங்கவிருந்த மருத்துவ படிப்புக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல நடைபெற்று வந்த மருத்துவ கவுன்சிலிங்கும் 30ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.