சென்னை: நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிவர் புயல் மற்றும் கனமழையால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி, காவிரி டெல்டா விவசாயிகளின் வேளாண் பயிர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு சேதப்பட்டுள்ளன. மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.74 கோடியை விடுவித்து உத்தரவிட்ட அ.தி.மு.க. அரசு, அதை யாருக்கு கொடுத்தது? என்ன செலவு செய்தது? என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.

4 நாள் பயணமாக, மத்தியக்குழு வந்து பார்வையிட்டு திரும்பிய பிறகும், ரூ.3,758 கோடி மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டிருப்பதாக கூறப்பட்டாலும் பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் இன்றுவரை அடித்தட்டு மக்களுக்கு உரிய உருப்படியான நிவாரணம் எதுவும் போய் சேரவில்லை. கடுமையான இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கும் எந்த நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை.

மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், ஏதோ ரூ.3,758 கோடி அளவிற்கு மட்டுமே பாதிப்பு என குறைத்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. உண்மையான சேத விவரங்களை கூறி மத்திய அரசிடம் அதிக நிதி கேட்க வேண்டும்.

அதற்கு தி.மு.க. நாடாளுமன்ற – மாநிலங்களவை உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம்தர அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறார்கள்.

அரசு வழங்கும் நிவாரண உதவி விவசாயிகளுக்கு கொஞ்சமாவது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்திட வேண்டும். ஆகவே, பயிர்க்காப்பீடு மற்றும் பேரிடர் நிதி இரண்டையும் சேர்த்து பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். இந்த நிவாரணத்தொகையைக் காலம் தாழ்த்தாமல், உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.