நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த முதல்வர் சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை அறிவிப்பு…

சென்னை: நிவர் புயல் தீவிர புயலாக மாறி இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்பட  13 மாவட்டங்களில் நாளையும்  பொதுவிடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  புயலாக வலுவடைந்தது. இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

புயல் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு. ஆனால், புயல் கரையை கடக்கும் நேரம் மேலும் தாமதமாகி உள்ளதால், சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

அதன்படி,  சென்னை, திருவள்ளூர், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை பெய்து வருவதால், 75 சதவீதம் நிரம்பியிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிலைமைகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். கொட்டும் மழையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

அதைத்தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய  தமிழக முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று நள்ளிரவில் புயல் கரையைக் கடக்கவிருப்பதால், நாளை தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.