புதுடெல்லி: சட்டப்படி செய்துகொள்ளப்பட்ட கலப்பு திருமணத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதென கூறிவிட்டது உச்சநீதிமன்றம்.

சத்தீஷ்கர் மாநிலம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. 33 வயதான முஸ்லீம் ஒருவர், 22 வயது இந்துவான தனது மகளை மணம் செய்துகொள்வதற்காக போலியாக மதம் மாறி, திருமணம் முடித்தவுடன் பின்னர் மீண்டும் முஸ்லீமாக மதம் மாறிவிட்டார் என்று பெண்ணின் தந்தை வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த மோசடியான திருமணத்தை ரத்துசெய்ய வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால், மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,

சம்பந்தப்பட்டவர்கள் எந்த மதமாக இருந்தாலும், ஒரு திருமணம் சட்டப்படி நடந்திருந்தால், அதற்கு எதிராக இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறிவிட்டது.

மேலும், இதுதொடர்பாக மாநில அரசு பதிலளிக்க வேண்டுமென கூறி, விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது.