வேளாண்துறையில் தமிழகத்திற்கு கடைசி இடம்! அன்புமணி குற்றச்சாட்டு!

சென்னை:

ழல் மற்றும் நிர்வாகத்திறமையின்மையால்  வேளாண் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும், உற்பத்தி மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரக் கையேட்டில் 2016-2017 என்ற தலைப்பிலான ஆவணத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் துறை சார்ந்த வளர்ச்சி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில் வேளாண்துறை வளர்ச்சியில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் வேளாண்துறை மைனஸ் 8 சதவீதம் வளர்ச்சியடைந்து இருக்கிறது.

கடந்த 2015-2016-ம் ஆண்டில் மைனஸ் 3.50 சதவீத வளர்ச்சியை சந்தித்த தமிழக வேளாண்துறை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது என்பது வேதனை அளிக்கிறது.

2014-2015-ம் ஆண்டில் தமிழகத்தின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.49,409 கோடியாக இருந்தது. இது அடுத்த ஆண்டில் ரூ.47,678 கோடியாகவும், கடந்த ஆண்டில் ரூ. 43,871 கோடியாகவும் சரிந்திருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தின் வேளாண் உற்பத்தி 2010-2011-ம் ஆண்டில் இருந்த அளவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த பாசனத் திட்டத்தையும் செயல்படுத்தாததால் தான் இரு ஆண்டுகளாக வேளாண் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்தித்துறை, தொழில் துறையிலும் தமிழகத்திற்கு கடைசி இடம் தான்.

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதற்கு இரு முக்கியக் காரணங்கள் ஊழலும், நிர்வாகத் திறமையின்மையும் தான்.

புதியக் கொள்கைகளை வகுத்து செயல்படுத்த தமிழக அரசுக்கு திறமையோ, துணிவோ இல்லை. எனவே இந்த அரசை அகற்றி விட்டு, வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்து, செயல்படுத்தும் திறன் கொண்டவரின் தலைமையில் புதிய அரசை அமைப்பதே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி