2019 பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட மாட்டாது : அமித் ஷா

டில்லி

ரப்போகும் 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் முன் கூட்டி நடத்தப்பட மாட்டாது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் 2019 ஆம் வருடம் மே மாதம் முடிவடைய உள்ளது.   அதற்கு முன்பே தேர்தல் நடைபெறும் என ஊகங்கள் கிளம்பி உள்ளன.   பிரதமர் மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.   எனவே தற்போது பல சட்டப்பேரவைகளின் ஆயுட்காலம் முடிவடைவதால் அந்த தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார் .   அப்போது அவர், “பிரதமருக்கு தேர்தல்களை ஒன்றாக நடத்தும் எண்ணம் உள்ளது.  அவர் இது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விவாதிக்க எண்ணி உள்ளார்.  அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஒப்புதல் அளித்தால்  புதிய சட்டம் இதற்காக இயற்றப்படலாம்.    அத்துடன் இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நமது அரசியல் சட்டப்படி அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் அளிக்காமல்  மாறுதல் எதையும் செய்ய முடியாது.    அதனால் பாராளுமன்ற தேர்தல்கள் முன்கூட்டி நடத்தப்பட வாய்ப்பில்லை.  அரசுக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை.   நாங்கள் இப்போது கர்நாடகா தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம்.   கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: No advancing of Parliament election : Amit shah
-=-