லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது….டில்லி காங்கிரஸ்

டில்லி:

பாஜக.வுக்கு எதிரான கூட்டணியில் ஆம் ஆத்மி பங்கேற்கும என்று டில்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்திருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,‘‘நாடு மற்றும் டில்லியின் நலன் கருதி மகா கூட்டணியில் ஆம் ஆத்மி பங்கேற்கும்’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து டில்லி காங்கிரஸ் கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளனர்.

இது குறித்து டில்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சரஸ்மித்த முகர்ஜி, மூத்த தலைவர் சட்டர்சிங் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்கட்சியில் வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது’’ என்றனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் அஜய் மேகன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.

இது குறித்து டில்லி காங்கிரசார் கூறுகையில், ‘‘2015ம் ஆண்டு டில்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களை கைப்பற்றியது. ஆனால், தற்போது அக்கட்சி வாக்கு வங்கியை தக்க வைக்க போராடி வருகிறது.

அதோடு அதன் பிரபலமும் குறைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவில் வெற்றி பெறவில்லை. 2015ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை அக்கட்சியின் வளர்ச்சி மேல் நோக்கி இருந்தது. 56 முதல் 57 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி வளர்ச்சி தற்போது 28 சதவீதத்தை அடைந்துள்ளது’’ என்றனர்.

கார்ட்டூன் கேலரி