லக்னோ:

பாபர் மசூதி இடத்திற்கு பதிலாக வேறு மாற்று நிலம் வழங்கினாலும், அது ஈடாகாது என்று கூறியுள்ள  ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு, ராமஜென்ம பூமி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று தெரிவித்து உள்ளது.

ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 9ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராமஜென்மபூமி இந்துக்களுக்கே சொந்தம் என்றும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடத்தை ஒதுக்கும்படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலே இருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு பதிலாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ;மத்திய அரசு அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் மசூதிக்கு மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்ளாது. அது மசூதிக்கு ஈடாகி விடாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்றி தீர்வு காண்போம் என்று கூறி உள்ளார்.