ஒடிசாவில் பிஜூ ஜனதா தள ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இருக்காது…நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்:

‘‘அடுத்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தள ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இருக்காது’’ என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் முடிவு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘‘குஜராத், இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். குஜராத் தேர்தல் முடிவுகள் ஒடிசா தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஒடிசா மாநிலத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தள ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இருக்கும் என்பதை நாம் நம்பவில்லை. அந்தளவுக்கு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல் முடிவு எதிர்வரும் பிஜப்பூர் இடைத்தேர்தலில் கூட பிரதிபலிக்காது’’ என்றார்.

ஓடிசா மாநில சட்டமன்ற தேர்தல் 2019ம் ஆண்டு நடக்கிறது. ஒடிசா சட்டமன்ற காங்கிரஸ் கொறடா தாரா பிரசாத் பாகினிபாதி கூறுகையில்,‘‘குஜராத்தில் பாஜக.வுக்கு கடுமையான நெருக்கடியை காங்கிரஸ் கொடுத்தது. குஜராத்தில் பாஜக.வின் வெற்றி ஒடிசா அரசியலில் எதிரொலிக்காது’’ என்றார்.

மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான தர்மேந்திரா பிரதான் கூறுகையில்,‘‘குஜராத்தில் பாஜக 6வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இதன் தாக்கம் ஒடிசாவிலும் இருக்கும்’’ என்றார்.