லக்னோ: மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை ஆகாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகள் வழியே இஸ்லாமியர்கள் மூலம் தொழுகை வாசிப்பதற்கு காசிப்பூர், பாரூகாபாத், ஹத்ராஸ்  போன்ற மாவட்ட நிர்வாகங்கள் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து,  காசிப்பூர் எம்.பி. அப்சல் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், மூத்த வழக்கறிஞர் எஸ் வாசிம் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ஒலி பெருக்கி சாதனத்தை பயன்படுத்தாமல் மனித குரலால் தொழுகையை நடத்திக் கொள்ளலாம். கோவிட்- 19 வழிகாட்டுதல்கள் மீறப்படாத வரை, மாவட்ட நிர்வாகம் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது என்று  நீதிபதிகள் எஸ். சஷி காந்த் குப்தா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை எந்த சூழ்நிலையிலும் ஒலி பெருக்க சாதனங்களை  பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது. அந்தந்த மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்த  மனு தாரர்கள் அனுமதி கோர தவறிவிட்டனர்.
எந்த விண்ணப்பமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் தாக்கல் செய்யப்பட்டால், அது ஒலி மாசு விதிகளின் கீழ் தீர்க்கப்படலாம். ஒலி பெருக்கிகள் மூலம் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதாக கூற முடியாது என்றும் தெரிவித்தனர்.
ஆகையால் ஒலிபெருக்கிகள், பிற ஒலி பெருக்கி சாதனங்கள் பயன்படுத்தும் நடைமுறை அரசியலமைப்பின் பிரிவு 25-ன் கீழ் கூறப்பட்டுள்ள மத சுதந்திர பாதுகாப்பு அம்சங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.