புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் பதியப்பட்ட கற்பழிப்பு வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பெயில் வழங்க முடியாதென தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கை, கீழமை நீதிமன்றமே விசாரிக்கும் எனவும், விசாரணை முடிவடையும்வரை, பெயில் வழங்க முடியாது எனவும் கூறிவிட்டது உச்சநீதிமன்றம்.

ஆசாராம் பாபுவின் பெயில் வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமனாவின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆசாராம் பாபுவுக்கு எதிராக தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கில் இன்னும் 210 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, இப்போது பெயில் வழங்கினால் விசாரணையில் தடை ஏற்படும்” என்றார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கை கீழ் நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் எனவும், விசாரணை முடியும்வரை பெயில் வழங்க இயலாது எனவும் உத்தரவிட்டது.

குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோரின் மீது தனித்தனியாக கற்பழிப்பு மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததது தொடர்பாக புகார் அளித்திருந்தார்கள் என்பது நினைவிருக்கலாம்.