அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு! ஆனால் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,  சென்னை அரசு  மருத்துவமனைகளில் சுமார் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக சென்னை திகழ்கிறது. தமிழகத்தின் இதர பகுதிகளை விட 2 மடங்கு அதிக பாதிப்பு சென்னையில் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, அதிக பாதிப்பு உள்ளது.  சென்னையில் இதுவரை 2,86,569  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,415 பேர் மரணம் அடைந்துள்ளதுடன்,  26,194 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளை நாடினால்,அங்கு படுக்கை இல்லை என்று திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆனால் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18 ஆம் தேதி நிலவரப்படி சென்னையின் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சுமார் 35 சதவீத படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்ததாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார், கே.எம்.சி, கிங்ஸ் மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 4368 படுக்கைகளில், 2826 படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, 1542 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4363 படுக்கைகளில், 714 ஐ  கொரோனா நோயாளிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா  நெகடிவ் வரும் வரை தொடர்ந்து சிகிச்சையில் இருப்பார்கள் என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய நிலையில்,  ஒவ்வொரு மணி நேரமும் படுக்கையின் நிலை மாறிக் கொண்டே இருப்பதாகவும், தற்போது, ​​கோவிட் உள்ள இளம் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள்,  இது கடுமையான சவாலை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும்,  போதுமான அளவு படுக்கைகளை ஏற்படுத்தும் வகையில்,  புதிய வார்டுகளை உருவாக்கி வருகிறோம், அதனால்  எந்த பற்றாக்குறையும் இருக்காது என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள  11 கோவிட் சுகாதார மையங்களில், 1800 படுக்கைகளில், 1057 காலியாக இருப்பதாகவும், பெரும்பாலான சுகாதார மையங்களில், சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் எப்போதும் கிடைக்கும் ஆம்புலன்ஸ் வசதிகளும் உள்ளன என்றும் சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறித்து ஆய்வு செய்ய, நகரத்தில் 14 பெரிய கோவிட் பராமரிப்பு மையங்கள் இருப்பதாகவும்,  அவை முக்கிய மூன்றாம் நிலை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அத்திப்பட்டுவில்  நான்கு பராமரிப்பு மையங்களில் 1,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருப்பபதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, சுகாதாரத் துறையின் தரவுகளின்படி (18ந்தேதி நிலவரம்) மொத்தமுள்ள  17,813 படுக்கைகளில் 12,972 படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சென்னையில்  கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் பெட் தர மறுக்கப்படுவதாகவும், வேறு மருத்துவமனைக்கோ அல்லது வீட்டிலிருந்தோ  சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கொரோனா விஷயத்தில் மாநில அரசு உண்மையான தகவல்களை தெரிவிக்க மறுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.,