புதிய ஆட்சி அமையும்வரை பெரிய திட்டங்கள் கிடையாது: கட்டுமான நிறுவனங்கள்

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிதாக ஆட்சியமைப்பது யார் என்று தெரியாதவரை, எந்தப் பெரிய கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொள்வதில்லை என மராட்டிய மாநில கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஏனெனில், புதிய அரசு பதவியேற்ற பின்னர், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் மாறலாம் என அவர்கள் காத்திருக்க முடிவுசெய்துள்ளனர்.

கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது; தற்போதைய நிலையில், நிலவரச் சொத்து சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தொங்கு நாடாளுமன்றம் அமையும் எனவும், நரேந்திர மோடியே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் எனவும் பல்வேறான மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டுள்ளன.

மேலும், சிலர், காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறிவருகிறார்கள். எனவேதான், பொறுத்திருந்து பார்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தவொரு நிச்சயமற்ற சூழலில், பெரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வது உசிதமல்ல.

அதற்கு பதிலாக, சிறிய திட்டங்களை மட்டுமே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள், தற்போதைய நிலையில், சொகுசு இல்லங்களைவிட, கட்டுபடியாகும் விலையில் கிடைக்கும் சாதாரண சிறிய வீடுகளையே அதிகம் எதிர்பார்ப்பதும் இந்த முடிவிற்கான காரணம்.

– மதுரை மாயாண்டி