ஸ்டாலின் கேசிஆர் சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்….

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் சந்திப்பு நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த நிலையில்,  ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமானது திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இருந்தாலும், தெலுங்கானா முதல்வரின் ஆசைக்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டதாகவும், மீண்டும் பாஜக ஆட்சி வராமல் தடுக்கும் வகையில்,  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் 3வது அணி இணைய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3வது அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், நேற்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ஏற்கனவே கடந்த வாரம் ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்தபோது, ஸ்டாலின் நேரம் ஒதுக்க முடியாத நிலையில், நேற்று மாலை சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் உள்பட தேசிய கட்சிகளும் ஆவலோடு எதிர்பார்த்திருந்து காத்துக்கண்டிருந்தன. இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் என்ன கூறப்போகிறார்கள் என்று ஊடகங்களும் ஆழ்வார்பேட்டையில் திரண்டிருந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு தவிர்க்கப்பட்டது.

இரு தலைவர்களும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம், ஆட்சி அமைப்பது  குறித்து விரிவாக விவாதித்ததாக கூறப்படு கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் கேசிஆருடன் சந்திப்பு நடத்தியது பல்வேறு யூகங்களை எழுப்பியது.  சந்திப்பு நிறைவடைந்ததும் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பார்கள்.. அப்போது சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், சந்திப்பு முடிந்ததும் கேசிஆர் செய்தியாளர்களை சந்திக்காமல் எஸ்கேப்பானார்.

இதையடுத்து, கேசிஆர் உடனான சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது அதில்,  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான ஸ்டாலின், சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகரராவை சந்தித்தால், தேவையில்லாத யூகங்கள் உருவாகும் என ஸ்டாலின் நினைத்த தாகவும், ஆனால், சந்திரசேகரராவ், தொடர்ச்சியாக நேரம் கேட்டதால், அவரை சந்திக்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், இந்த பேச்சுவார்த்தையின்போது,  காங்கிரஸ்  பாஜக அல்லாத 3-வது அணி அமைப்பது தொடர்பாக திமுகவின் ஆதரவு கேட்டே கேசிஆர் வந்ததாகவும், ஆனால்,  அப்படி ஒரு அணி அமைவது பாஜகவுக்கு சாதகமானது என்பதை உணர்ந்துள்ள ஸ்டாலின், மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன், சந்திரசேகர ராவின் கருத்துகளை முழுமையாக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கேசிஆரின் கோரிக்கைக்கு  சம்மதம் தெரிவிக்காமல், தான் ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,  ராகுல் காந்திதான் பிரதமர் என முதன் முதலில் நான் தான் அறிவித்தேன். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு பதில் நீங்கள் காங்கிரஸ் தலைமையிலான அணியில் இடம்பெறலாம் அல்லது ஆதரவு தரலாமே என வலியுறுத்தியதாகவும்  தகவல் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினின் இந்த பதிலை எதிர்பார்க்காத கேசிஆர் அதிர்ச்சி அடைந்ததால்தான் செய்தியாளர்கள் சந்திப்பை  தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.