Random image

வெள்ளம் பாதிப்பு: கேரளாவில் 1ஆண்டு அரசு விழாக்கள் ரத்து

திருவனந்தபுரம்:

ரலாறு காணாத மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில், ஒரு ஆண்டு எந்தவிதமான அரசு விழாக்களும் நடைபெறாது என்றும், அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்படுவதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழையால் பேரழிவு ஏற்பட்டது. கடந்த (ஆகஸ்டு) மாதம்  8ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக  பெய்து வந்த பேய்மழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பலத்த சேதத்தை எதிர்கொண்டன. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் நொறுங்கி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர்.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள். தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

வெள்ளப்பாதிப்பில் இருந்து கேரளம் மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் கேரளாவில் 1 ஆண்டு அரசு விழாக்களை ரத்து செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் நடைபெற இருந்த திரைப்பட விழா, இளைஞர்கள் விழா போன்றவற்றை ரத்து செய்து அதற்கான தொகையை மாநில வெள்ள நிவாரண நிதியில் சேர்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.