ஒரே தேசம் ஒரே தேர்தல் சாத்தியமில்லை….தேர்தல் ஆணையம்

டில்லி:

சட்ட கட்டமைப்புகள் மேற்கொள்ளாமல் ”ஒரே சமயத்தில் தேர்தல்” நடத்துவது சாத்தியம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று தேசிய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சட்ட பணிகள் மேற்கொள்ளாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமே இல்லாதது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் கூறுகையில், சட்ட கட்டமைப்பு செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.