தமிழகத்தில்  ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லை! சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழகத்தில்  ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இல்லை! சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

இன்று  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு  வருகை தந்த தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , அங்குள்ள  திருத்தணி பஸ்நிலையம், முருகன் கோவில், அரசு மருத்துவமனை உள்பட பல பகுதிகளை   ஆய்வு செய்தார். திருத்தணி பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் முககவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து வரும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளது. அது முழுமையாக பொதுமக்கள் உபயோகத்திற்கு வர இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும்.

அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருந்து, தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.