இஸ்லாமாபாத்: இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடியும்வரை, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டே இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி திறந்து விடப்படுமா? அல்லது தொடர்ந்து மூடப்பட்டிருக்குமா? என்பது குறித்த முடிவு மே மாதம் 15 தேதி மேற்கொள்ளப்படுமென, அந்நாட்டின் விமானப் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்த நிலையில், அந்நாட்டு அமைச்சரின் இந்தக் கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

“இந்திய – பாகிஸ்தான் உறவில் தற்போதுவரை எந்த மாற்றமும் இல்லை. இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்து, புதிய அரசு பதவியேற்கும் வரை நிலைமைகள் மாறப்போவதில்லை என்பதால், பாகிஸ்தான் வான்வழியை இந்திய விமானங்களுக்கு திறந்துவிடுவது சாத்தியமில்லை என்ற நினைக்கிறேன்” என்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கடந்த மார்ச் 27ம் தேதி, தனது வான்வழியை, புதுடெல்லி, பாங்காக் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை தவிர, மற்ற அனைவருக்கும் திறந்துவிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதலே, பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களின் வான்வழிகளை, பரஸ்பரம் ஒருவருக்கெதிராக ஒருவர் மூடிவைத்துள்ளனர்.