புதுடெல்லி: எதிர்வரும் தேர்தல்களில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

‍டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையில் இதைத் தெரிவித்துள்ளார் சுனில் அரோரா.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அரோராவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் பேசியதாவது, “ஒரு காரை போலவோ அல்லது பேனாவைப் போலவோ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை யாரும் சேதப்படுத்திவிட முடியாது. மேலும், இந்த இயந்திரங்களை ஹேக் செய்யவோ, தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது.

கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறைக்கு மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. நாட்டின் உச்சநீதிமன்றமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது” என்றார்.