மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறுவாரா?

மும்பை: தேசிய கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியில், சேர்மன் உள்ளிட்ட 2 புதிய உறுப்பினர்கள் புதிதாக இணைந்தும், மகேந்திர சிங் தோனியை அணியில் மீண்டும் தேர்வு செய்வது குறித்த நிலைப்பாட்டில் இன்னும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உலகக்கோப்பை டி-20 தொடருக்கு தோனி தேர்வுசெய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு, அவர் முதலில் விளையாடி தகுதியை நிரூபித்தால்தான் அதைப் பற்றி முடிவுசெய்ய முடியும் என்ற பதிலே கிடைக்கிறது.

கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதி, இந்திய அணி தோல்வியடைந்ததிலிருந்து, இந்திய அணி சார்பாக வேறு எந்த தொடர்களிலும் தோனி இதுவரைப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மார்ச் 29ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் 13வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் களமிறங்கவுள்ளார். அவரின் ஆட்டம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாட்டைப் பொறுத்து, அவர் டி-20 உலகக்கோப்பைத் தொடரில் இடம்பெறுவாரா? என்ற ஆர்வம் மிகுந்த கேள்வி எழுந்துள்ளது.