என்னது ஓய்வா..? ‘நோ சான்ஸ்’ என்கிறார் 41 வயது கிறிஸ் கெய்ல்..!

புதுடெல்லி: தான் இன்னும் குறைந்தது 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார் 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் புயல் கிறிஸ் கெய்ல்.

அவரின் கூற்றுப்படி, இந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை மற்றும் 2022ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்பது தெளிவாகியுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது, “இப்போதைக்கு ஓய்வுத் திட்டம் எதையும் நான் வைத்திருக்கவில்லை. என்னுடைய சர்வதேச கேரியருக்கு இன்னும் 5 ஆண்டுகள் மிச்சமிருப்பதாய் நான் நம்புகிறேன். எனவே, 45 வயதுக்கு முன்பாக ஓய்வுபெறுதவற்கு வாய்ப்பே இல்லை.

இடையில், இரண்டு டி-20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ளன. வயது என்பது வெறும் எண்ணிக்கைதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றுள்ளார் அவர்.

கெய்ல், இதுவரை நடைபெற்ற அத்துனை ஐபிஎல் தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். கடைசியாக முடிவடைந்த ஐபிஎல் தொடரில், வெறும் 7 போட்டிகள் மட்டுமே ஆடி, 288 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.