கொரோனா பீதியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றமில்லை – அறிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி

மும்பை: இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கொரோனா பரவலை முன்னிட்டு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.

உலகெங்கிலும் பல நாடுகளில் தீவிரமாகப் பரவி, இதுவரை மொத்தம் 3000க்கும் மேற்பட்டோரை பலிகொண்டுவிட்ட கொரோனா வைரஸ் காரணமாக, உலகளவில் விளையாட்டுத் தொடர்கள் உள்ளிட்ட பல போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்படுகின்றன.

எனவே, இந்த மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இதுகுறித்து பதிலளித்த பிசிசிஐ தலைவர் கஞ்குலி, “ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி துவங்கி நடைபெறும். கொரோனா வைரஸ் பாதிக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வீரர்கள், அணிகள் விமான நிலையங்கள், வீரர்கள் தங்கும் ஹோட்டல்கள் போன்றவைகளுக்கு பிசிசிஐ சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் ரசிகர்களிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரசிகர்களின் புகைப்பட கேமராக்களை கொண்டு படம் எடுப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விளையாட்டு நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதானது, பல மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.