ஜிஎஸ்டி அமல்படுத்தாத வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது: டில்லி உயர்நீதிமன்றம்

--

டில்லி:

ஜி.எஸ்.டி அமல்படுத்தாத வக்கீல்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் மீது நிர்பந்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, டெல்லி ஜிஎஸ்டி போன்றவற்றில் மத்திய அரசு தெளிவுபடுத்தும் வரை இதை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த 3 வரி அமைப்புகள் மூலம் வக்கீல்களும், சட்ட நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது சட்டப்பிரிவு 279ஏ&ன் படி விதிமீறலாகும் என்று டெல்லியை சேர்ந்த ஜேகே மிட்டல் என்ற சட்ட நிறுவன உரிமையாளர் ஜேகே மிட்டல் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையின் போது இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘‘ஜி.எஸ்.டி கவுன்சில் அளித்த பரிந்துரைகளுக்கு நேர்மாறான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. யார் சேவை பெறுகிறார்களோ? அவர்கள் தான் வரி செலுத்த வேண்டும். சட்ட நிறுவனம் இதற்கு பொறுப்பல்ல.

2011ம் ஆண்டு நிதி சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள வக்கீல்கள் ஏன் மத்திய ஜிஎஸ்டி சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன. நிதி சட்டத்தில் பதிவு செய்ய விலக்கு பெற்றவர்கள் புதிய ஜிஎஸ்டி.யில் பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் முரளிதர் மற்றும் பிரதீபா சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனுவை விசாரித்து, ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தாத வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க கூடாது. இதில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.