‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கவில்லை! மு.க.ஸ்டாலின்

சென்னை:  தமிழக சட்டமன்றத்தில், ‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொரோனா சோதனை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் இன்று தொடங்கியது.

3 நாள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில்,  முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி, தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப் பேரவை நாளைக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில், நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில்  உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கை திமுக சார்பில் வைக்கப்பட்டது.

ஆனால், அதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார்.. பின்னர் இன்றைய பேரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதில், நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற என கூறினேன்.

ஆனால், சபாநாயகர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை அது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற் குரியது என தெரிவித்தார். மேலும், பேரவை நாள்களை நீடிக்க கோரிக்கை வைத்தும் ஏற்றுக் கொள்ளபடவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

” இரண்டு நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது போதாது என்று ஏற்கனவே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கோரிக்கை வைத்திருந்தார். அதை சபாநாயகர் ஏற்கவில்லை. இரண்டு நாட்களில் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப போதாது”.

,” நீட் பிரச்சனை குறித்தும், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்ப உள்ளோம்”.

ஆளும் கட்சியினர் நீட் தேர்வில் நாடகம் நடத்தி வருவதாகவும், இதுவரை நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை, வலியுறுத்தவில்லை என்றும், போதுமான அழுத்தம் தரவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

மிழக சட்டமன்றத்தில் நாளை  15-ம் தேதி (நாளை) கேள்வி நேரம், பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானம், அது தொடர்பான விவாதம் நடைபெறும்.

நாளை மறுதினம் 16-ம் தேதி காலை கேள்வி நேரம் முடிந்ததும் துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அத்துடன், சமீபத்தில் வெளியிடப்பட்ட அவசரச் சட்டங்கள் தொடர்பான மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. அத்துடன் கூட்டம் நிறைவடைகிறது.

2 நாட்கள் முழுமையாக பேரவைக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வு, ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம், கொரோனா தடுப்பு, புதிய கல்விக் கொள்கை போன்ற விவகாரங்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.

You may have missed