டில்லி:

த்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

2014ம் வருடம், மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது அக்கட்சிக்கு 282 உறுப்பினர்கள் இருந்தார்கள்.   அதன் பிறகு நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் அக்கட்சி தொடர் தோல்வி அடைந்து வருகிறது. அக் கட்சிக்கு 274 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை. இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் அந்த கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து தற்போது மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கட்சிக்கு எதிரான நிலைபாடுள்ள ஆந்திர மாநில ஆளுங்கட்சியான தெலுங்கு தேசத்தின் தலைவர் சந்திரபாபு நாயுடு, கடந்த பிப்ரவரி மாதமே தேவைப்பட்டால் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தை ஆளும் அதிமுக என்ன மாதிரியான நிலைபாடு எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் வட்டாரத்தில், “மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக கட்சி, இங்கு அதிமுகவை ஆட்டிப்படைத்து வருகிறது.  இந்த நிலையில் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்களே அதிகமாக இருக்கும் பாஜகவில் சில அதிருப்தி எம்.பி.க்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே அதிமுக ஆதரிக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக அரசு தோற்கும்.

இதுவரை தங்களை அடிமைப்படுத்திய பாஜகவை எதிர்த்து அதிமுக வாக்களிக்குமா. அல்லது எஜமான விசுவாசத்துடன் ஆதரிக்குமா என்பது முக்கியமான கேள்வி” என்கிறார்கள்.

இன்னொரு புறம், “ஒருவேளை மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்து வாக்கெடுப்பு நடந்தால் பாஜகவையே அதிமுக ஆதரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உறுதி, கெயில் மீத்தேன் திட்டங்களை வாபஸ் பெறுவது போன்ற உறுதிகளைப் பெற்றுக்கொண்டு ஆதரிப்பார்களா, அல்லது தனிப்பட்ட ஆதாயங்களுக்கு முக்கியத்துவம் தருவார்களா என்பதே கேள்வி” என்ற யூகமும் இருக்கிறது.