பாராளுமன்றத்தில் இன்று மோடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு: விவாதம் அனல் பறக்குமா?

டில்லி:

மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசுமீது தெலுங்கு தேசம் உள்பட எதிர்க்கட்சி கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ந்தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆகியவை  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்திருந்தன.

இந்த நோட்டீசின் மீதான விவாதம் 20ந்தேதி  (நாளை) மக்களவையில் நடைபெறும் என்று பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 11 மணி விவாதம் தொடங்குகிறது.

இன்று  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற இருப்பதால், பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக அறவித்து உள்ளது. அதுபோல  அனைத்து கட்சி கொறடாக்களும்,  பாராளுமன்ற உறுப்பினர்களை அவைக்கு கட்டாயம் வரும் அறிவுறுத்தி உள்ளன.

விவாதத்தில், காங்., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பாரதிய ஜனதா பதில் அளிக்கும். இதன் காரணமாக அனல்பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முழுவதும் விவாதம் நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் ஓட்டெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது அதிமுக, பாஜ அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும் என்று அறிவித்து உள்ளது. பாஜ கூட்டணி கட்சியான சிவசேனா, முதலில் ஆதரவு தருவதாக கூறியது தற்போது எதிர்த்து வாக்களிப்பதாக கூறி உள்ளது.

இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு தப்பித்துக்கொள்ளும் என்று கூறுப்படும் நிலையில், மோடி தலைமையிலான அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்படுவதே, அவரது அரசு மீதான கரும்புள்ளி என்றும் விமர்சிக்கப்படுகிறது.