சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது சர்ச்சையாகி உள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு சேர்ந்து புதுவையிலும் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அதுபோல புதுச்சேரியிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்று வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், கூட்டணியாகவே தேர்தலை சந்தித்தது.

ஆனால், சமீப காலமாக மாநிலத்தில்   திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சில நிகழ்வுகளில் பேசிய திமுக தலைவர்கள்,  புதுச்சேரியில் திமுக தலைமையில்தான் கூட்டணி என்று கூறியதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,   புதுச்சேரி மாநில திமுக பொதுச் செயலாளராக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டார். அவர் அங்கு நிகழ்ச்சியில் பேசிய  ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநிலம் சொர்க்கப் பூமியாக இருந்தது. ஆனால், தற்போது நரகமாக மாறிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெறவைப்பேன். அப்போதுதான் புதுச்சேரிக்கு மீண்டும் வருவேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியது, புதுவை காங்கிரஸ்- திமுக கூட்டணியில்  குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  தமிழகத்தின் அரசியலை விட புதுச்சேரியின் அரசியல் மாறுபட்டது என்றும், அங்கு கழகத்தை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன , புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என்றார்.

மேலும், புதுவையில்  தி.மு.க. சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இது கழகப் பணிகள்தான்; தேர்தல் பணிகள் அல்ல. புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளிவரவில்லை. இதனை கூட்டணியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.