நீட் மொழிபெயர்ப்புக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை : அமைச்சர் உறுதி

--

சென்னை

மிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறைக்கு நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறி உள்ளார்.

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாட்களில் எக்கச்சக்கமான குழறுபடிகள் காணப்பட்டன.   அதை ஒட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சி பி எஸ் இ க்கு உத்தரவிட்டது.   அதை எதிர்த்து சி பி எஸ் இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த மேல் முறையீட்டு மனுவில் தமிழக அரசு அமைத்த மொழிபெயர்ப்பாளர்களால் கேள்வித் தாட்கள் மொழி பெயர்க்கப்பட்டதாகவும் அதற்கு தமிழக அரசே பொறுப்பு எனவும் தெரிவித்தது.  இதே கருத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் தெரிவித்தார்.    இதை ஒட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

காஞ்சிபுரம் சங்கரமட விழா ஒன்றில் கலந்துக் கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மொழிபெயர்ப்புக் குழறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் எனக் கூறியடு தவறானது.   தமிழக அரசு எந்த ஒரு மொழிபெயர்ப்பாளரையும் பரிந்துரை செய்யவில்லை.   கேள்வி தாட்களை சிபிஎஸ்இ வல்லுனர்கள் மொழி பெயர்த்துள்ளனர்.  அதனால் இதன் முழுப் பொறுப்பு சி பி எஸ் இ யை சார்ந்தது.  தமிழக மொழிபெயர்ப்புத் துறைக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என கூறி உள்ளார்.