மும்பை

கொரோனா பாதிப்பில் மும்பையின் ஹாட் ஸ்பாட் ஆன தாராவி பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாரும் மரணம் அடையவில்லை.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதில் மும்பையில் சுமார் 50000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இதில் 1700 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  நாட்டில் அதிக அளவில் பாதிப்படைந்த பகுதியாக மும்பை உள்ளது.  மும்பை நகரில் அமைந்துள்ள தாராவி பகுதியில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் ஏற்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்  பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் அதிக அளவில் பாதிப்பு உள்ளதால் மும்பை நகரின் ஹாட் ஸ்பாட் என கூறப்படுகிறது  இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகக் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  மேலும் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிரது.

மும்பை மாநகராட்சி துணை ஆணையர் கிரண் திகாவ்கர், “மும்பை நகர் சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.  கடந்த ஒரு வாரமாக தாராவி பகுதியில் ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை.    இது மாநகராட்சி கொரோனா ஒழிப்பில் சரியான பாதையில் செல்கிறது என்பதற்கு ஒரு அடையாளமாகும். அத்துடன் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.