சென்னை: அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில், அமைச்சருக்கு கொரோனா என்று வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று திண்டிவனத்திலுள்ள அமைச்சரின் நேர்முக உதவியாளர் ராஜராமன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது: அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த சில தினங்களாக வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்ததால் சென்னையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது திண்டிவனம் இல்லத்திற்குத் திரும்பிய அமைச்சர் அங்கேயே ஓய்வு எடுத்து வந்தார். இதனைத்தொடர்ந்து, மீண்டும் உடல் பரிசோதனைக்காக அவர் சென்னைக்கு இன்று புறப்பட்டுச் சென்றார்.

இந்த சூழலில் திட்டமிட்டு அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறானவை என்றார். சண்முகத்துக்கு கொரோனா இல்லை என்று மருத்துவ பரிசோதனை முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.