சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இல்லை என்று கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்றும், பஞ்சாயத்து தலைவர் மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர் என்று  குற்றம்சாட்டி, இதுதான் திமுகவின் கூட்டணி தர்மமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  இத்ந நிலையில் புதுச்சேரி மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, மு. க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்றும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தேன் என்று கூறியவர்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது, கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை,,  . எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது என்று கூறினார்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தார்.