கொரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை: சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கொரோனா தடுப்பூசியால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 2ம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து பிரதமர் மோடி, பல அரசியல் தலைவர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்து சுகாதார  அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

நாட்டில் போடப்படும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பனவை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வழிநடத்த வேண்டுமென கூறும் பிரதமர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியவுடன் முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டார். பிரதமருக்கு நன்றி கூறுகிறோம்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 0.0004 ஆகும். இது மிக குறைவான பாதிப்பாகும். தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை.60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.